இன்னுமொரு நாள்… இந்த நாள்…
இந்த இனிய நாள்..
இன்பமுடன்
மொட்டவிழ்ந்து
இதழ் விரிந்து
கனமாய், காரமாய்
பூத்து விரியட்டும்!
அதனால்
மனித மனங்கள்
விழிக்கட்டும்!
சன்மார்க்க கீதமும்
ஸலவாத்தின் சங்கை நாதமும்
முழங்கட்டும்!
சத்திய போதகர் நெறியும்
சத்திய வழியும்
ஓங்கட்டும்! – அதை
சனங்கள் குடி கழிக்கட்டும்!
முஸ்லிம் தேசிய நாயகன்
தேசிய அமைச்சர்
அதாவுல்லா…
குறு நில அமைச்சர் உதுமான்..
குற்றூர் தலைவன்
தவமும்- மாலை
அணிவித்து வரவேற்கட்டும்!
ஆலிங்கணஞ் செய்து அழைத்து வரட்டும்!
வாழ்த்துக்கள் சொரிந்து வரவேற்கட்டும்.
வீதியின் குறுக்கே – அமைந்த
தோரணங்களும்
தெருவோர அலங்காரங்களும் – தோரண
மின் விளக்குகளும்
வாழ்த்துக்கூறி வரவேற்கட்டும்!
குலவை வீடும்
மங்கையரும்- தேன்
நிலவுக்குப் பரிசம்
போடட்டும்!
மகளிரும் ஆடவரும்
அணியணியாய் நின்று
தீனுல் இஸ்லாத்தினை
முழக்கம் செய்யட்டும்!
நாரைய தக்பீர்
அல்லாஹு அக்பர்- என
உரத்து மொழிந்து
சத்திய நாதரை
வரவேற்கட்டும்!
பன்னீர் செம்பெடுத்து
பன்னீர் தெளிக்கட்டும்!
அத்தர் வீசி
தென்றலுக்கு நிறம் பூசட்டும்!
-கவிஞர்-
பாலமுனை பாறுக்கின்
கவித்துளிகள்
-ஆலிம்-
பிர்னாஸின்
கவித்துளிகள்
வாழ்த்துப்பாக்கள்
வரவேற்பு கீதங்கள்
வாழ்த்தி வரவேற்கட்டும்!
பக்கீர்களும்
முரீதீன்களும்
பைத்துக்கள் இசைத்து
றபான் வாத்திய இசையில்
அழைத்துச் செல்லட்டும்!
செங்கம்பளமும்
வெள்ளையும்
விரித்து…
விரிந்த மலர்கள் – நல்ல
மணமலர்கள்
பறித்து… எடுத்து தூவி
வரவேற்கட்டும்!
ஆத்மீக பேரரசின்
மகாராஜனை
தெய்வ பக்தர்களும்
சீட கோடிகளும்
வரவேற்றதை
தடயங்கள், எச்சங்கள்
அடையாளப்படுத்தட்டும்!
இந்த வானும்
வான் மீனினங்களும்
வான் மதியும்
வானகத்துப் பகலவனும்
சோபனங்கூறும்
அத்தர் மழை.. கன மழை
பொழியும்
பொன்னெழில் இயற்கையும்
இந்தப் பூமியும்
நம் தேசமும்
நமது மண்ணும்
வல்லோன் மன்றில்- இந்
நற்செய்திக்காய்
தூது போகட்டும்…! – இவை
நாளை நமக்காய்
நற்சான்று கூறட்டும்!
சத்திய கீறல்களால்
எதிர்கால
சந்ததியினர்
ஸூஃபித்துவ
சித்திரங்களை
வரையட்டும்…!
மறைமுறை மாண்பினையும்
மாநபி மகிமையினையும்- இதனில்
மருவி உலவும்
உண்மைகளையும்-கை
நழுவிய காலத்தையும்
தழுவி நின்ற பாதைகளையும்
ஒப்பிட்டு – காலம்
கடந்தாவது உணரட்டும்! – அவ்
உணர்வுகளால், ஊமையாய்…குருடாய்…
உறங்கிய யதார்த்தங்களை-மனம்
இரங்கி கசிந்து
சித்தரிக்கட்டும்!
பரமானந்த வாழ்வின்
மோன நிலை… மோக நிலை.. ஞான நிலை
அற்ப மாயங்களின்
அடர்ந்தேறல்களில்
மயங்கி… கசங்கி..
மிதிபடட்தை-நினைவு
கொணரட்டும்…!
அன்பு நபியின்
அஹமது நபியின்
ஆலத்து ஹபீப்பின்
அரியணையில்
கருங்கொடியூர்
கண்ணியம் காத்த மஹான்
அப்துல் மஜீத் பதிவுகள்
விண்ணகத்து றஹ்மானின்
மானசீக அப்து
ஆரிபுபில்லாஹ், ஆரிபு நாயகத்தை
கூடி நின்று கௌரவிக்கட்டும்!
வாழ்த்துப் பாடி
வரவேற்கட்டும்!
இன்னுமொரு நாள்… இந்த நாள்…
இந்த இனிய நாள்….
இன்பமுடன்
மொட்டவிழ்ந்து
இதழ் விரித்து
கனமாய்… காரமாய்
பூத்து விரியட்டும்!
ஆசிரியை எம்.ஐ. தாஜுன்நிஸா
அக்கரைப்பற்று