குத்புல் அக்தாப், அஷ்-ஷெய்க், அஸ்-ஸெய்யித் அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி)
வாரிசு வழிமுறை :
ஸபீத்திய்யிக் குடும்பத்து, அஹ்லுல் பைத் வம்சத்து யெமன் நாட்டு இலங்கையின் 5ம் தலைமுறை வாரிஸாக ஷெய்குனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி) விளங்குகின்றார்கள். பலத்த பரம்பரை சங்கமமுடைய வம்சவியலாக பெருக்கெடுத்து வருகை தந்த ஒரு புனிதக் குடும்பத்தில் இப்பெரியார் பிறந்துள்ளார்கள். இக்குடும்பம் அப்பாஸிய்யி, ஸித்திக்கிய்யி, ஹுஸைனிய்யி நஸபுக் கலப்புடையது. இம்மஹானின் தாய் வழி. ஸித்தீக்கிய்யி, ஹுஸைனிய்யியும் தந்தை வழி அப்பாஸிய்யியுடையதுமாக இருந்துள்ளது. அக்கரைப்பற்று, தைக்கா நகரில் நீள்துயில் கொள்ளும் அல்-குத்ப் யாஸீன் மௌலானா (றலி)ன் வழியில் உமரிய்யி கலந்திருப்பதற்கு வாய்ப்புள்ளது.
பிறப்பு :
இலங்கையின் கிழக்கே அக்கரைப்பற்று எனும் பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மஹான், அல்-குத்ப் அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி), அவர்கள் பரிசுத்த அஹ்லுல் பைத் குடும்பத்தில் வந்தவர்கள். தாய் தந்தை இருவழியும் அஹ்லுல் பைத் குடும்பத்தையுடையவர்கள். இப்பெரியார் யெமன் தேசத்திலருந்து கி.பி 1750களின் பிற்பாடு இலங்கை வருகை தந்த ஷெய்க் இஸ்மாயீல் யமானியின் மகன் வழியில் வருகின்ற ஒருவராவார்கள்.
அஷ்-ஷெய்க் அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி) 2ம் உலக மகாயுத்தத்தின் அந்திமத்திலும் டொனமூர் ஆட்சி கால இறுதிப் பகுதியில் 1941 ஆகஸ்ட் 18 (ஹிஜ்ரி 1360 ரஜப் 26)ம் திகதி திங்கள் கிழமை மிஹ்ராஜுடைய தினம் ஜனனித்திருக்கின்றார்கள். அவர்களின் தாய் அஸ்-ஸெய்யித் துஹ்பா உம்மா (வலி), தந்தை கலீபத்துல் காதிரிய்யி, அஸ்-ஸெய்யித், முஹல்லம் அப்துஸ் ஸமத் ஆலிம் மக்கத்தார் (றலி)யும்ஆவார்கள். (85. ஆதாரம் : பிறப்பத்தாட்சிப் பத்திரம்).
ஷெய்குனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி), தாயின் கருவறையில் சமைந்திருக்கும் போது, தாய் இந்தியா நாகூரில் ஸமாதி கொண்டிருக்கும் குத்புல் மஜீத் ஷெய்க் ஷாஹுல் ஹமீத் மீரான் ஸாஹிப் நாயகம் (றலி) அவர்களால், தான் அருள் பெறும் காட்சியை கண்டதன் நிமிர்த்தம் அதன் நினைவாக தன் மகனுக்கும் ‘அப்துல் மஜீத்’ என்ற பெயரை சூட்டியுள்ளார்கள். (86. தகவல் : அஸ்-ஸெய்யித் துஹ்பா உம்மா (வலி) – 1998ல்).